ரமலான் முபாரக்!


(பிறருக்கு) நன்மை செய்யுங்கள்,ஏனென்றால் நன்மை செய்வோரை இறைவன் நேசிக்கிறான்"(2:195)
யார் கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்விற்கு எந்த தேவையும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம்: புகாரி)
ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், ஷைத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு இரவைக் கொண்ட மாதம், நரகவாதிகள் நரகத்திலிருந்து விடுதலை பெறும் மாதம், குர்ஆனை இப்பூவுலகத்தில் இறக்குவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம், துஆக்கள் அங்கீகரிக்கப்படும்
மாதம்
நோன்பின் கடமைகள்
1. பருவமடைந்த முஸ்லிமான ஆண், பெண் அனைவரின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும்.
2. முதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க முடியாதவர்கள் ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
3. பைத்தியக்காரர்கள், நன்மை-தீமையை பிரித்தறிய முடியாத மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் ஆகியோர்கள் மீது நோன்பு நோற்பது கடமையில்லை. நோன்புக்கு பகரமாக ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டியதுமில்லை.
4. சில நாட்களில் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நோயாக இருந்தால் அந்த நோயின் காரணமாகவும் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. நோய் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
5. பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. ஊர் திரும்பியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
6. கற்பமாக இருக்கும் பெண், அல்லது பாலூட்டிக் கொண்டிருக்கும் பெண் நோன்பு நோற்பதால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதேனும் துன்பம் வரலாம் என்று பயந்தால் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. அந்தப்பயம் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
7. மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு நோற்கக்கூடாது. இரத்தம் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
8. "தீ" மற்றும் நீரில் மூழ்குதல் போன்ற ஆபத்துக்குள்ளானவர்களை காப்பாற்றுவதற்காக நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பிறகு அந்த நோன்பை நோற்க வேண்டும்.

நோன்பை முறிக்கும் செயல்கள்
1. சாப்பிடுதல், குடித்தல் போன்றவற்றால் (அவைகள் உடலுக்கு பயன்தராத புகைபிடித்தல் போன்றவையாக இருந்தாலும் சரியே) நோன்பு முறிந்து விடும்.
2. முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்து விடும், தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.
3. வேண்டுமென்று வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடும். தானாகவே வாந்தி வந்தால் நோன்பு முறியாது.
4. உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்களை (மருந்து, குளுக்கோஸ் போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்புக்கு செலுத்தினாலும் நோன்பு முறிந்து விடும்.
5. மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்து விடும்.